Friday, June 13, 2008

மறுக்கிறது எஸ்.சி.வி (சன் டிவி)- அழகிரி புகார்

மதுரை: ராயல் கேபிஷன் விஷனுக்கு தனது குழும சானல்களை இணைப்பு தர மறுப்பதாக, அந்த நிறுவனத்தை ஆரம்பித்துள்ள முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் ராயல் கேபிள் விஷன் என்கிற புதிய எம்.எஸ்.ஓ முளைத்துள்ளது. இதை ஆரம்பித்திருப்பவர் வேறு யாருமல்ல, சாட்சாத் மு.க.அழகிரியேதான்.கடந்த 9ம் தேதியன்று இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் மதுரை முழுவதும் சன் குழும சானல்கள் எதுவுமே தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சன் சானல்களை ராயல் கேபிள் விஷன் நிறுவனம்தான் முடக்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.ஆனால் சன்டிவியின் எஸ்.சி.வி. நிறுவனம்தான் தங்களது ராயல் கேபிள் விஷனுக்கு இணைப்பு தர மறுப்பபதாக மு.க.அழகிரிகுற்றம் சாட்டுகிறார்.

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்து கூறுகையில், கேபிள் டிவி தொழிலை அவர்கள் மட்டும் தான் (சன் டிவி) செய்ய வேண்டுமா? நாங்கள் செய்யக் கூடாதா?மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை அளிப்பதற்காக ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை துவக்கி இருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் நலன் கருதியும் இது துவக்கப்பட்டுள்ளது.இதற்கு இணைப்பு தர வேண்டும் என்று 31.05.2008ல் சன் டிவிக்கு ஒரு கடிதம் எழுதினோம். மீண்டும் 3.6.2008ல் ஒரு கடிதம் எழுதினோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு இணைப்பு தர மறுக்கிறார்கள்.அவர்களுடைய நேரடி ஒளிபரப்பு திட்டத்தை (சன் டைரக்ட் டிடிஎச்) செயல்படுத்த வேண்டும் என்பதற்காக எங்களுக்கு இணைப்பு தர மறுக்கிறார்கள்.

மக்களுக்கு மாதம் ஒன்றிற்கு 130 ரூபாய் கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கும் நோக்கத்தோடு நாங்கள் இந்த நிறுவனத்தை துவங்கி இருக்கிறோம்.வட மாவட்டங்களுக்கும் வருகிறோம்:தற்போது தென் மாவட்டங்களில் இந்த அமைப்பு உள்ளது. விரைவில் வட மாவட்டங்களிலும் எங்கள் சேவையை துவக்க இருக்கிறோம்.

ராயல் கேபிள் விஷன் துவக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி தவறானதாகும். சுமங்கலி கேபிள் விஷன் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் போது நாங்கள் குறைந்த கட்டணத்தையே வசூலிக்கிறோம்.தற்போது எங்களிடம் 80 சேனல்கள் உள்ளன. மேலும் பல சேனல்கள் வரவிருக்கின்றன. இதை தடுப்பதற்காக, சன் டிவி நிறுவனம் தங்களின் நேரடி ஒளிபரப்பு சேவையை செயல்படுத்துவதற்காக, எங்களுக்கு இணைப்பு தர மறுக்கிறார்கள்.

இதுகுறித்து டிராய் அமைப்பிடம் புகார் கொடுத்திருக்கிறோம். சட்டத்தை மீறி அவர்கள் செயல்படுகிறார்கள் என்றார் அழகிரி.

0 comments: