Tuesday, May 13, 2008

20 கெட்டப்புகளில் ரஜினி!

குசேலன் படத்தில் ரஜினிகாந்த் இருபது விதவிதமான கெட்டப்புகளில், அதுவும் ஒரே பாடலில் தோன்றி அசத்தப் போகிறாராம்.


மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற கத பறயும்போல் இப்போது ரஜினி நடிக்க குசேலன் எனும் பெயரில் தமிழிலும், குசேலடு எனும் பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தை தமிழில் கவிதாலயா-செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கில் அஸ்வினி தத்தின் வைஜயந்தி மூவீஸும் செவன் ஆர்ட்ஸும் தயாரிக்கின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும் ஜூலை 18 அல்லது 25ம் தேதி படத்தை வெளியிடும் முடிவிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இதுவரை வந்த ரஜினி படப் பாடல்களில் இல்லாத அளவுக்கு ரஜினியைப் புகழ்ந்தும் அவரது பெருமைகளைச் சொல்லும் விதத்திலும் குசேலன் படத்தில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.ரஜினியின் அறிமுக பாடலை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் போட்டு படமாக்கியுள்ளனர்.

பாட்ஷா படத்தில் "அழகு... அழகு..." பாடலுக்கு கண்டக்டர், டிராபிக் கான்ஸ்டபிள், நாதஸ்வரக் கலைஞர், ஜேம்ஸ்பாண்ட், அல்ட்ரா மாடர்ன் இளைஞர், ரவுடி, சர்வர் என பல கெட்டப்புகளில் தோன்றி அசத்தியிருப்பார் ரஜினி.

இப்போது குசேலன் படத்தில் ஒரே பாடலில் 20 வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறாராம்.

பசுபதி-மீனா ஜோடிக்கும் ஒரு பாடல் உண்டாம். கடைசி பாடல் நயன்தாராவின் சோலோ பாடல். ரஜினியை நினைத்து அவர் பாடுவது போன்ற இப்பாடலை சாதனா சர்க்கம் பாடியுள்ளார்.தெலுங்குப் பதிப்புக்கும் இதே பாடல்கள் மற்றும் பாடகர்கள்தானாம்.

இப்போதைக்கு படப்பிடிப்புக்குத் தேவையான வடிவில் பாடல்களைத் தந்துள்ள பிரகாஷ், விரைவிலேயே தனது சவுண்ட் எஞ்ஜினியர் ஸ்ரீதருடன் லண்டனுக்குப் பறக்கிறார். அங்குள்ள மெட்ரோபோலிஸ் ஸ்டுடியோவில் சவுண்ட் மிக்ஸிங் செய்து உலகத் தரத்தில் பாடல்களைத் தரப் போகிறாராம்.

குசேலனின் உள்நாட்டு உரிமையை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் ரூ.64 கோடிக்கு பிரமிட் சாய்மிரா நிறுவனம் பெற்றுள்ளது. வெளிநாட்டு உரிமை ஐங்கரன் நிறுவனத்துக்கு பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் ரஜினி கவுரவ வேடத்தில் தோன்றும் படமிது என்றுதான் கூறப்பட்டது.

ஆனால் படிப்படியாக ரஜினியின் மனதைக் கரைத்து, குசேலனை முழுமையான ரஜினி படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வாசு.

0 comments: