Thursday, April 24, 2008

33,000 பவுன்டுகளுக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பல் டிக்கெட்


லண்டன்: டைட்டானிக் கப்பலின் முதல் மற்றும் கடைசிப் பயணத்தின்போது விற்கப்பட்ட டிக்கெட் 33 ஆயிரம் பவுன்டுகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

96 ஆண்டுகளுக்கு முன்பு 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தெற்கு இங்கிலாந்தில் உள்ள செளதாம்ப்டனிலிருந்து நியூயார்க்குக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கியது டைட்டானிக். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதுவே அதன் கடைசி பயணமாகவும் மாறிப் போனது.

நடுக் கடலில் பனிப் பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது டைட்டானிக். இந்த விபத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.இந்தக் கப்பலின் டிக்கெட் ஒன்று இங்கிலாந்தைச் சேர்ந்த லிலியன்அஸ்பிளன்ட் என்பவரிடம் இருந்தது.

லிலியனுக்கு 5 வயதாக இருக்கும்போது லிலியனின் குடும்பத்தினர் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தனர். லிலியனுடன் அவருடைய பெற்றோர், நான்கு சகோதரர்கள் டைட்டானிக்கில் பயணம் செய்தனர். ஸ்வீடனிலிருந்து அமெரிக்காவுக்கு குடி பெயருவதற்காக இந்தப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியபோது லிலியன், அவருடைய தாயார், ஒரு சகோதரர் மட்டும் உயிர் பிழைத்தனர். ஆனால் தந்தை மற்றும் 3 சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.உயிர் பிழைத்த லிலியன் தான் பயணம் செய்த டிக்கெட்டை மிக பத்திரமாக வைத்திருந்தார். 2006ம் ஆண்டு மே 6ம் தேதி தனது 99வது வயதில் லிலியன் மரணமடைந்தார்.

அதுவரை அவர் ஒரு ஷூ பாக்ஸில் பத்திரப்படுத்தி வைத்திருந்த டைட்டானிக் டிக்கெட்டை அவருடைய ஒன்று விட்ட சகோதரர் சமீபத்தில் ஏலத்திற்குக் கொண்டு வந்தார்.லிலியன் வைத்திருந்த டிக்கெட் 3ம் வகுப்பு பயணச் சீட்டாகும்.

தென் மேற்கு இங்கிலாந்தின், டெவிஸஸ் நகரில் உள்ள ஹென்றி ஆல்டிரிட்ஜ் அன் சன் என்ற ஏல நிறுவனம் இந்த கடைசி டைட்டானிக் டிக்கெட்டை ஏலத்தில் விட்டது.அதில், 33 ஆயிரம் பவுன்டுகளுக்கு இந்த டிக்கெட் ஏலம் போனது.

இந்த ஏலத்தில் டைட்டானிக் டிக்கெட் தவிர, கப்பல் மூழ்கியபோது நின்று போன ஒரு பாக்கெட் கடிகாரமும் ஏலத்திற்கு விடப்பட்டது. அது 31 ஆயிரம் பவுன்டுகளுக்கு ஏளம் போனது. அதை ஒரு ஸ்வீடன்காரர் ஏலத்தில் விட்டார்.

ஏலத்தில் சீனா, அமெரிக்கா, ஸ்வீடன், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஏலம் கேட்டனராம்.

0 comments: