Friday, April 11, 2008

பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.


அதே நேரத்தில், இந்த இட ஒதுக்கீடு வரம்பிலிருந்து வசதி படைத்தவர்களை (கிரீமி லேயர்) நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பால் மத்திய அரசு உற்சாகம் அடைந்துள்ளதோடு, எல்லா கட்சிகளும் இதை வரவேற்றுள்ளன. மேலும், வரும் கல்வியாண்டிலேயே 27 சதவீத இட ஒதுக்கீடு அமலாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம், பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 1991ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதால், கடந்த கல்வியாண்டில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.


மேலும் இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அர்ஜித் பசாயத், சி.கே.தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் "பெஞ்ச்'சின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.


இதற்கிடையில், இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, கடந்த நவம்பர் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி உட்பட நான்கு நீதிபதிகள் ஒரே விதமான தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர். பெரும்பான்மை அடிப்படையில் நான்கு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு:


கிரீமி லேயர் நீக்கம்: மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது சரியானதே. அது சட்ட விரோதமானது அல்ல. இட ஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசு கொண்டு வந்த 93வது அரசியல் சட்டத் திருத்தம் செல்லத்தக்கதே. இந்தச் சட்டம், அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் எதையும் மீறவில்லை.


இந்த இட ஒதுக்கீடு வழங்குவது சாதி அடிப்படையில் என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்களை (கிரீமி லேயர்), அதிலிருந்து நீக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் பயன்களை அவர்கள் பெறுவது தடுக்கப்பட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதை தீர்மானிக்க, மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கியது சரியே. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் முன்னேறிய பிரிவினரை கண்டறிய, மத்திய அரசு ஏற்கனவே பின்பற்றிய வரையறைப்படி கண்டறியலாம்.


இந்த இட ஒதுக்கீடு சட்டம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. அதே நேரத்தில், அரசு நிதியுதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தமட்டில், இந்த விவகாரத்தில் அரசே முடிவு எடுக்கும். ஏனெனில், தனியார் கல்வி நிறுவனங்கள் எதுவும் இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரவில்லை.


பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், வசதி படைத்தவர்களை நீக்கலாம். இருந்தாலும், ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டில், வசதி படைத்தவர்களை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய நிலை அப்படியே தொடரும். மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இந்த இட ஒதுக்கீடு, காலவரையின்றி தொடரக் கூடாது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


இந்த வழக்கில், பல விஷயங்களில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்துக்களை தெரிவித்திருந்தாலும், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் விவகாரத்தில் மட்டும் அவர்கள் மாறுபட்டுள்ளனர். நான்கு நீதிபதிகள் ஒரு கருத்தையும், ஐந்தாவது நீதிபதி பண்டாரி மற்றொரு கருத்தையும் தெரிவித்துள்ளனர். தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் விஷயத்தில், அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என நான்கு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.


ஆனால், நீதிபதி தல்வீர் பண்டாரி, "அரசு நிதியுதவி பெறாத கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்தை மீறுவதாகும். அரசியல் சட்டப் பிரிவு 19(1) (ஜி)யின் படி, அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்' எனக் கூறி, சாதி அடிப்படையில் ஒதுக்கீடு தொடரும் போது, சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க முடியாது' என்றும் கூறினார். தவிரவும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேட்டிருக்கிறார்.


சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம், 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த, 2007 மார்ச் 29ம் தேதி பிறப்பித்த தடை அகற்றப்பட்டுள்ளது. 2008-09ம் கல்வி ஆண்டிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அமலாகும். ஏற்கனவே எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான 22.5 சதவீதத்துடன் இதையும் சேர்த்து 49.5 சதவீத ஒதுக்கீடு அமையும். - நன்றி : தினமலர்

0 comments: