பனித்திரையைக்கூட விலக்கிப் பார்க்க ஸ்திரமில்லாத சூரியன் உதித்த ஒரு காலைப் பொழுது. கூட்டினுள் உடல் ஒளிக்கும் நத்தையாய், ஸ்வெட்டருக்குள் காணாமல் போன அமுதனும், பாரதியும் உள்ளங்கையை உரசிக்கொண்டிருகிறார்கள் பாரளுமன்றம் செல்லும் பேருந்தை எதிர்பார்த்து.
மஞ்சள் காமாலை வந்தவன் கண்கள் போல, பேருந்து மஞ்சள் விளக்கை பனியினூடே பாய்ச்சியவாறு வந்தது.
பாரதி.. இந்தப்பக்கம் வந்திரு நின்னுக்கிட்டே போயிரலாம். அமுதன் அழைத்தான் பேருந்தின் முன்பக்கத்திலிருந்த நண்பன் பாரதியை.
அமுதனின் பக்கத்தில் வந்தபின்புதான் தெரிந்தது, இவன் நிற்குமிடம் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிய ஒரு நான்ஸ்டிக் பதுமையின் பக்கத்திலென்று.
அமுதா... ம்..ம்.. குளுருக்கு இதமா பாப்பா பக்கத்தில செட்டில் ஆகிட்ட போல.
சத்தமா பேசாத. யாராவது தமிழ் தெரிஞ்சவன் இருக்கப்போறான்.
அப்படி யாரும் இருந்த மாதிரி தெரியல. நம்ம ஆட்களத்தான் பார்த்தாலே தெரியுமே. தைரியமா என்ன வேணும்னாலும் பேசலாம்.
நண்பா பாரதி.. சூரியன் பக்கத்தில இருந்தா தான் உஷ்ணமா இருக்கும். ஆனா பக்கத்தில ஒரு நிலாதான் இருக்கு. இருந்தாலும் உடம்பு சூடேறுதே. இவள நிலானு சொல்றதா இல்ல சூரியன்னு சொல்றதா?
ம்..ம்.. இவள் நிலவொளியில் வந்து போகும் சூரியன் !
சரியா சொன்ன பாரதி. பிடிச்ச மீன திரும்ப ஆத்துக்குள்ள விட்டா, அது என்ன வேகத்துல போகும் தெரியுமா. அது மாதிரி குளுரு பறந்திருச்சு.
சரிதான் அமுதா.. ஆனா இவ தெனமும் இதே நேரத்துல வருவாளா, இனிமே இவள பார்ப்போமானு தெரியலயே.
பாரதி.. இதெல்லாம் கடல் மீன பார்த்து ரசிக்கிற மாதிரி. நாம பார்த்த அதே மீனு திரும்ப வருமா, அத பாப்பமா இதெல்லாம் யாருக்கும் தெரியாது. பார்க்குற நேரம் ரசிச்சிக்கிட வேண்டியதுதான். இதென்ன பக்கத்துத் தெரு பொண்ணு மாதிரி தொட்டி மீனா. எப்ப வேணும்னாலும் பார்த்துக்கிட.
எனக்காக கொஞ்சம் வேண்டிக்கோயேன். பக்கத்துல உக்காந்திருக்கிற பொண்ணு அடுத்த ஸ்டாப்ல எறங்கிறனும்னு. நான் அவ பக்கத்துல உட்கார்ந்து பயணிக்கிற ஒரு பத்து நிமிஷம் போதும். அவ கூடவே வாழ்ந்த ஒரு சந்தோசம் கிடைக்கும்.
டேய்.. அப்ப நான்?
சரி.. சரி.. டென்ஷன் ஆகாத. நீ ஒரு அஞ்சு நிமிஷம்; நான் ஒரு அஞ்சு நிமிஷம். ஒகே வா? ஆத்துல போகுற தண்ணிய யாரு குடிச்சா என்ன !
இப்படியே கலகலப்பா ஒரு கால்மணி நேரம் போச்சு. இத்தனையையும் கேட்டுக்கொண்டே வந்தவள், தனது ஹேண்ட் பேக்கைத் திறந்தாள். அதிலிருந்த "அவள் விகடனை" எடுத்து பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தாள் எங்களை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே.
அவள் புரட்டியது பக்கங்களை மட்டுமல்ல; எங்களையும் தான். சேற்றுக்குள் காலைவிட்டவன், மெதுவாக காலை உருவுவது போல், அந்த இடத்திலிருந்து மெதுவாக எங்கள் கால்கள் உருவப்பட்டது ஒரு அனிச்சைச் செயலே.
அப்புறமென்ன.. அடுத்த ஸ்டாப்ல எடத்த காலிபண்ணிட்டோம்ல.
உழவன்
tamil.uzhavan@gmail.com
http://tamizhodu.blogspot.com
Wednesday, March 5, 2008
பனியில் ஒரு சுடர்
Posted by "உழவன்" "Uzhavan" at 3/05/2008 06:45:00 PM
Labels: சிறு கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment