விவசாயிகள், அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் * காவிரி - வைகை, தாமிரபரணி - நம்பியாறு இணைப்பு திட்டம் * எல்லா மதத்தினர் தாலிக்கும் வரி விலக்கு * வரி இல்லா பட்ஜெட்!
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படாததோடு, பல்வேறு வரி சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அதிக சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் வரும் 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஏராளமான புதிய அறிவிப்புகள், திட்டங்கள், வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், மத்திய அரசின் பட்ஜெட்டை பின்பற்றி மாநில அரசின் பட்ஜெட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து, மாநில அரசின் நிதியில் இருந்தே நதிநீர் திட்டப் பணிகளை வரும் ஆண்டே துவக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வேளாண் துறைக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வேலூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது, திருப்பூரை தனி மாவட்டமாக்குவது போன்ற அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ள வரி சலுகைகள்: தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தப்படும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு. சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு. பன், ரஸ்க், சோயா எண்ணெய், வெல்லம், ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு மற்றும் பல பொருட்களுக்கு வரி குறைப்பு. பயிர் காப்பீடு திட்டத்தில், 25 லட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை அரசே வழங்கும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு புதிய பயிர்க்கடன். கூட்டுறவு பயிர்க்கடன் வட்டி 4 சதவீதமாகக் குறைப்பு. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி திட்ட நிதி 15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு. ரூ. ஆறாயிரம் மகப்பேறு நிதியுதவி பெற, இனி வருமானச் சான்றிதழ் தேவையில்லை. கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூ.15 கோடி கடன் முழுமையாக ரத்து. ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவில் பெற்ற விவசாயக் கடன்கள் ரூ. ஐந்து கோடி முழுவதும் ரத்து. கேபிள் `டிவி' நடத்துவோருக்கு கேளிக்கை வரி ரத்து. ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகை ரூ.16 கோடியும் தள்ளுபடி. நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் கடனை திருப்பிச் செலுத்தினால் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி. 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் முற்றிலும் ரத்து. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்பு கட்டணம் ரத்து. அரசு அலுவலர்களுக்கு 47 சதவீதமாக இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து அகவிலைப்படி உயர்வு. ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்வு. புதிய அறிவிப்புகள்: சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள். திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, நாகை மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள். புதிய திருப்பூர் மாவட்டம் உதயம். புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி ஆகிய புதிய வருவாய் தாலுகாக்கள் அமைத்தல். மூவாயிரத்து 500 புதிய பஸ்கள் வாங்கப்படும். விசைத்தறி நெசவாளர்கள், புத்தக பதிப்புத் துறையில் பணிபுரிவோர், நரிக்குறவர்கள், அரவாணிகள் ஆகியோருக்கு தனித்தனி நல வாரியங்கள். சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு உடற்பயிற்சி நிலையம். தமிழ் வழியில் படித்து, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் பரிசு. ஐந்தாயிரத்து 440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச் சேவை மையங்கள். குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம். காவிரியுடன் மாநிலத்துக்குள் பாயும் ஆறுகளான அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு - வைகை - குண்டாறு ஆகியவற்றுடன் இணைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, காவிரியாற்றின் குறுக்கே கட்டளை பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் ரூ.165 கோடியில் செயல்படுத்தப்படும். அடுத்த கட்டமாக, இந்நதிகளை இணைக்க 255 கி.மீ., நீளமுள்ள கால்வாய்கள் அமைக்கப்படும். தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல ரூ.369 கோடியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம். ரூ.550 கோடியில் 48 ஆயிரத்து 500 தடுப்பணைகள், ஊரணிகள் அமைக்கும் பெரும் திட்டம். 100 புதிய அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 100 மேல்நிலைப்பள்ளிகளும் புதிதாக துவக்குதல். வேலூர் மற்றும் தேனியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள். சென்னையில் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதி, மாம்பலம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் உள்ள உபரி இடங்களில் புதிய சாலைகள் அமைத்து, சென்னை புறவழிச்சாலையுடன் இணைக்கும் அதிவேக வட்டச் சாலை ரூ. இரண்டாயிரத்து 300 கோடியில் அமைக்கப்படும். பட்ஜெட் துளிகள்: வரும் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் உரை மொத்தம் 82 பக்கங்களை கொண்டதாக இருந்தது. காலை 9.34 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் துவங்கிய நிதியமைச்சர் அன்பழகன், பகல் 12.18 மணிக்கு முடித்தார். மொத்தம் 2.45 மணி நேரம் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். உரையை வாசித்து முடித்ததும் முதல்வர் கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, இயக்குனர் அமிர்தம் ஆகிய உறவினர்களும், தி.மு.க., சார்பாக ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோரும், கவிஞர் வைரமுத்து உட்பட பல்வேறு வி.ஐ.பி.,க்களும் சட்டசபையின் மாடத்தில் அமர்ந்து பட்ஜெட் உரையை கேட்டனர். சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு நேற்று 64வது பிறந்தநாள் என்பதால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பட்ஜெட் உரையை அ.தி.மு.க.,வினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்த போதும், ம.தி.மு.க.,வினரும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் சபையில் முழுமையாக இருந்து பட்ஜெட் உரையை கேட்டனர். நதிகள் இணைப்பு திட்டம் : அறிவிப்பின் முழு விவரம் : நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக, பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:தமிழகம் போன்ற மாநிலங்களின் நீர் பற்றாக்குறை பிரச்னைகளுக்கும், நதிநீர் பங்கீட்டு பிரச்னைகளுக்கும், தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் மட்டுமே ஒரே தீர்வாக அமையும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில், முதற்கட்டமாக மாநிலங்களுக்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் திட்டங்களையாவது செயல்படுத்த, மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று, மத்திய அரசின் பாசன உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க தேசிய வளர்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த நிதியுதவியை எதிர்நோக்கி, மாநில அரசின் நிதியிலிருந்து தமிழகத்தில் பாயும் முக்கிய நதிகளை இணைப்பதற்கான பணிகள் 2008-09ம் நிதியாண்டில் துவங்கப்படும்.வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்காக காவிரி - அக்னியாறு - கோரையாறு - பாம்பாறு - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளை பகுதியில் தடுப்பணை கட்டும் திட்டம் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்நதிகளை இணைப்பதற்கான 255 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் அமைப்பது குறித்து தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
- நன்றி : தினமலர்
Friday, March 21, 2008
வரி இல்லா பட்ஜெட் - Tamil nadu Budjet
Posted by "உழவன்" "Uzhavan" at 3/21/2008 07:49:00 AM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment